Monday, August 8, 2016

இவங்களை வெச்சிக்கிட்டு...

அடியேன் : 
மந்திராலயம் போயிருந்தோமே. அப்பா. என்ன இடமில்லே. எப்பேர்ப்படட மகான். அங்கிருந்த மூணு நாளும் மனதில் ஒரு அமைதி. எப்போடா மறுபடி போய் அவரைப் பார்ப்போம்னு தோணுது.

தங்கமணி : 
அங்கே தங்கியிருந்த ஹோட்டல் சரியேயில்லை. சுடு தண்ணியே வரலை. மூணு நாளும் அறையை பெருக்கவே இல்லை அவன். போய் திட்டினப் பிறகே வந்து சுத்தம் செய்தான். அடுத்த முறை வேறே ஹோட்டலில்தான் தங்கணும்.

மகளதிகாரம் : 
இந்த முறை போனாலும் மார்கழி மாதமே போலாம்பா. சாப்பாடு காலை 8 மணிக்கே போட்டுடறாங்க. அந்த கஞ்சி அதை மறுபடி சாப்பிடணும் போலிருக்கு. இரவு உணவும் மடத்திலேயே போட்டுடறாங்க. பகல் முழுக்க சுத்திட்டு சாப்பிட மடத்துக்கு வந்துடணும்.

அடியேன் : 
உடுப்பி. போன வருடம் போய் பார்த்த குழந்தை கிருஷ்ணன் இன்னும் கண்ணிலேயே இருக்கான். மத்வர் முதல் வ்யாஸராஜர், விஜயேந்திரர், ராகவேந்தரர்னு பற்பல மகான்கள் நின்ற இடத்தில், நாமும் நிற்கிறோம்னு நினைச்சாலே உடம்பு அப்படியே புல் அரிக்குது.

தங்கமணி : 
இந்த முறை பலிமார் மடத்தில் அறை போடாதீங்க. எக்கச்சக்க பல்லி & பூச்சி. காபிக்கு எவ்ளோ தூரம் அலைய வேண்டியிருக்கு அங்கே. அடுத்த முறை ஒரு ஃபிளாஸ்க் எடுத்துப் போயிடணும். குப்பை போட சில கவர்கள் ரொம்ப முக்கியம்.

மகளதிகாரம் : 
woodlands சாப்பாட்டை விட கிருஷ்ணர் கோயில் சாப்பாடு செம. அமாவாசை அன்னிக்கு சாப்பாடு கிடையாது, இன்னிக்கு டிபன்தான் சொல்லிப்போட்டாங்களே, அப்புறம் அவல் பிரசாதம் & பாயசம் - இதெல்லாம் என் நாக்கில் இன்னும் ருசிக்கிது.

இவங்களை வெச்சிக்கிட்டு ஒரு கொலை கூடசெய்ய முடியாது போலிருக்கே. கிருஷ்ணா!!

***

Read more...

Sunday, May 22, 2016

கியர் மிதிவண்டியும், ஞானும் பின்னே கடைக்காரரும்கியர் மிதிவண்டி வாங்கி ஓட்டணும்னு ரொம்ப நாளா சொல்லிட்டே இருந்தேன். இனி இவன் வேலைக்கு ஆகமாட்டான்னு நண்பர் சீவின் வினோத் ஒரு நாள் மாலை தொலைப்பேசி, இங்கே கடையில் நிக்குறேன். கடனட்டை எடுத்து உடனே வா, உனக்கு ஒரு வண்டி வாங்கணும்ன்றாரு.

அடடா, சரி போவோம்னு போய் வண்டி பார்த்தோம். ஒரு வண்டியைத் தேர்ந்தெடுத்தாச்சு. ஏதாவது கேள்வி இருக்கான்னு கேட்டார் கடைக்கார். நமக்கு கியர் வண்டி எப்படி ஓட்டறதுன்னு ஐடியாவே இல்லாததால், சிலபல மிகவும் அடிப்படையான கேள்விகளைக் கேட்டு அவரை குடைஞ்சாச்சு.நான் : வேகமா போயிட்டிருக்கும்போது, போக்குவரத்து சிக்னல் வருது. நானும் நிக்கணும். அப்போ எல்லா கியரையும் குறைத்து 1-1க்கு வரணுமா? பைக், கார்லேல்லாம் அப்படிதானே செய்றோம்?

கடை: ஐயோ. அப்படியெல்லாம் இல்லீங்க. எந்த கியரிலும் நிற்கலாம். எந்த கியரிலும் கிளம்பலாம்.

நான்: அப்படியா. அடடே. இந்த தொழில்நுட்பத்தை ஏன் அந்த பைக், கார்காரங்க கொண்டு வரலே?

கடை: அடுத்த மாதம் நான் டெல்லிக்குப் போகும்போது அதைப் பத்தி பேசறேன்.

நான்: சரி. அப்போ நியூட்ரல் அப்படின்னு ஒரு மேட்டரே இல்லைன்றீங்க. க்ளட்ச் எங்கேன்னு சொல்லவேயில்லையே?

கடை: ஆ. க்ளட்ச்’லாம் இதில் கிடையாது. கியர் மட்டும்தான்.

நான்: ஓ. சரி. இந்த கியரை இப்படித்தான் மாத்தணுமா?

கடை: யோவ். வண்டி நிற்கும்போது கியர் போடாதே. அப்புறம் செயின் அவுந்து/அறுந்துப் போச்சுன்னு என்கிட்டே வரக்கூடாது.

நான்; சாரி சாரி. சரி. வண்டி ஓட்டும்போது, நாம் எந்த கியரில் இருக்கோம்னு தெரியறதுக்கு ஏதாவது குறி இருக்கா?

கடை: ஆமா. எந்த கியரில் இருக்கீங்கன்னு நீங்க ஞாபகம் வைக்க அவசியம் இல்லை. பார்த்தாலே தெரியும்.

நான்: நல்லவேளை செய்தீங்க. இல்லேன்னா, நான் வண்டி ஓட்டும்போது, 1-3, 2-4, இப்படி சொல்லிக்கிட்டே போகணும்.

கடை: சரி, அடுத்த கேள்வி?

நான்; இன்னும் ஏதோ கேட்கப் போக, நீங்க முன்னே பின்னே சைக்கிள் ஓட்டியிருக்கீங்களான்ற மாதிரி பார்த்தார் கடை. அதனால், இப்போதைக்கு இவ்வளவுதான் சார்னு சொல்லிட்டேன்.

நம்மகிட்டே இதுவரை இருந்த மிதிவண்டி, பைக் எதிலும் இந்த சின்னச்சின்ன சமாச்சாரங்களான ஒலிப்பான், நிறுத்துவான், பின்னோக்கிப் பார்க்கும் கண்ணாடி எதுவும் இருந்ததேயில்லை. இந்த வண்டியிலும் அதெல்லாம் வேணுமான்னு யோசிக்க, அதற்குள்ளாக எல்லாத்தையும் அவரே வெச்சிக் குடுத்துட்டாரு.

இப்படி ஒரு வழியாக வண்டியுடன் வீட்டுக்கு வந்து, வாங்கின விலையை விட ரொம்ப கம்மியாக ஒரு விலையைச் சொல்லி, அவ்வளவுக்குதான் வாங்கினேன்னு சொல்லியாச்சு.

அப்பா, இதுக்கும் கியர் இல்லாத வண்டிக்கும் என்ன வித்தியாசம்?

அதும்மா, சாலையில் மேடுகளில் ஏறும்போது, அதிக கியர் போட்டு ரொம்ப கஷ்டமில்லாமல் போயிடலாம்.

மிதிவண்டி வாங்கறதே, மிதிச்சி மிதிச்சி, உடற்பயிற்சி போல ஓட்டத்தான். அதிலும் கியர் போட்டு, சிரமமேயில்லாமல் ஓட்டணும்னா, அதுக்கு மோட்டர்பைக்கே வாங்கிடலாமே?

சரி சரி. புது புத்தகத்துக்கெல்லாம் அட்டை போட்டாச்சா? போய் ஏதாவது எடுத்துப் படி. அப்பா ஒரு ரவுண்ட் போயிட்டு வர்றேன்.

ஷப்பாஆஆஆ..

***Read more...

Sunday, March 20, 2016

தாசர் மாபியா - வாட்சப்பில் வினாடிவினா

வாட்சப்பில் வினாடிவினா

போன ஆண்டு நடுவில் ஆரம்பித்தேன் அந்த கேள்வி பதில் நேரம் - குடும்ப வாட்ஸப்பில். எதைப் பற்றி? - வேறென்ன. நம்ம தாசர் பாடல்களைப் பற்றிதான். தாசர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் எழுதிய புத்தங்கள், பாடல்கள் இன்னபிறவைப் பற்றி. அந்த வினாடிவினா நிகழ்ச்சியில், தினம் ஒரு கேள்வி கேட்கப்படும். விடையை எனக்கு தனியாக வாட்சப் செய்ய வேண்டும். பொதுவில் போட்டுவிடக் கூடாது. தினம் இந்த எச்சரிக்கையைச் செய்தும், சில நாட்கள், சிலர் தங்கள் விடையை பொதுவிலேயே போட்டுவிடுவர். பிறகு ‘மன்னிச்சு’ கேட்டும் விடுவர்.

50 நாட்கள் நடத்தியதில், தினமும் சராசரியாக 8-10 பேர் விடையளித்து வந்தனர். பலர் சரியாக. சிலர் சரியாக-தப்பாக. எனினும், மக்களின் பொதுஅறிவுக்காக போட்டியை நடத்தி, தினமும் மதிப்பெண்கள் வழங்கி வந்ததால், மக்களும் ஆர்வத்துடன் கலந்து விடையளித்து வந்தனர்.

அது போன ஆண்டு.

நிற்க.

இந்த ஆண்டு தாசர் பாடல்களைப் பற்றிய ஒரு புத்தகத்தைப் படிக்க வேண்டி, இதற்கான ஒரு அமைப்பில் சென்று சேர்ந்தபோது அவர்களிடம் மேற்கண்ட வினாடிவினாவைப் பற்றி சொன்னேன். உடனே இதை ஏன், நம் அமைப்பின் சார்பில் இந்த ஆண்டு செய்யக்கூடாதுன்னு கேட்டு, உடனடியாக ஒரு திட்டமும் தயாரிக்கப்பட்டது. இதற்கான பல்வேறு yahoo, google groupsகளில் விளம்பரம் செய்யப்பட்டு ஆர்வமுள்ள மக்களைத் திரட்டும் வேலையும் நடந்தது.

வாரம் இரு முறை (திங்கள் & வியாழன்) தலா 10 கேள்விகள் கேட்கப்படும். விடையளிக்க அடுத்த மூன்று நாட்கள் கால அவகாசம். விரிவான விடையெல்லாம் கிடையாது. ஓரிரு சொற்கள் மட்டுமே. இதெல்லாம் விதிகளாக சொல்லப்பட்டன.

சென்ற வாரம், முதல் பகுதி கேள்விகள் கேட்கப்பட்டன. இதுவரை 30 பேர் உள்ள குழுவில் 15 பதில்கள் வந்தன. அமெரிக்கா, வட இந்தியாவிலிருந்தும் சேர்ந்திருக்கின்றனர்.

கன்னட தாச சாஹித்யத்தைப் பற்றி மக்களை தினமும் ஒரு சில நிமிடங்களாவது படிக்க, யோசிக்க வைக்கணும்னு இந்த முயற்சி. எவ்வளவு நாட்கள் ஓடுதோ ஓடட்டும்னு துவக்கியாச்சு. இதில் இன்னொரு லாபம் என்னன்னு பார்த்தீங்கன்னா, கேள்விகள் கேட்பதற்காக நானும் நிறைய படிக்க வேண்டியிருக்கு. பொதுநலம் கலந்த சுயநலம். படித்து, கேள்விகளைத் தொகுத்து, வெளியிட்டு, விடைகளை சரிபார்த்து, அவற்றை வெளியிட்டு - முதல் சீசனுக்கு 3 மாதத்துக்காவது போட்டியை நடத்தணும்னு அவா. மற்றவை புரந்தரதாசர் கையில்.

***

Read more...

Thursday, March 10, 2016

கணக்கில் மதிப்பெண் குறைந்தால் பரவாயில்லை.


கணக்கில் மதிப்பெண் குறைந்தால் பரவாயில்லை.

ரஜினி ஜோக்ஸ் என்ற ஜானரில் ஒரு ஜோக் வரும். ஒரு தேர்வில் ஏதேனும் ஐந்து கேள்விகளுக்கு விடையளிக்கவும் என்று இருந்தபோது, தலைவர் எல்லா கேள்விகளுக்கும் விடையளித்துவிட்டு, ஏதேனும் ஐந்து கேள்விகளுக்கு மதிப்பெண் அளிக்கவும் என்று எழுதிவிட்டு வந்தார் என்று இருக்கும்.

அதே போல்..

நேற்று மாலை 4 மணி. ட்ரிங் ட்ரிங். அப்பா, கணக்கு மதிப்பெண் வந்துடுச்சு. நான் 92 எடுத்திருக்கேன்.

சூப்பர்மா. வெரி குட்.

அப்புறம் சிறிது நேரம் கழித்து மறுபடி ட்ரிங் ட்ரிங்.

ஒரு தப்பு நடந்து போச்சுப்பா. நான் இப்பதான் பார்க்கிறேன்.

என்னம்மா?

Part-Bயில் ஐந்து கேள்விகளில் மூன்று எழுதினால் போதும்னு போட்டிருக்கு. தேர்வில் நான் அதை கவனிக்காமல், ஐந்தையும் எழுதியிருந்தேன்.

சரி.

அதை என் மிஸ்ஸும் கவனிக்காமல், எல்லாக் கேள்விகளுக்கும் மதிப்பெண் கொடுத்திருக்காங்க. அதையெல்லாம் சேர்த்துதான் 92 வந்திருக்கு.

நல்லவேளை, மொத்த மதிப்பெண்கள் 100க்கு மேல் போயிருந்தா, கவனிச்சிருப்பாங்க. இப்போ கவனிக்கலை. அதானே?

அதில்லைப்பா. நான் நாளைக்கே போய், இதை சரியா திருத்துங்கன்னு சொல்லிடப் போறேன்.

மதிப்பெண் குறைஞ்சிடுமே பரவாயில்லையாம்மா?

அது ஒண்ணும் பிரச்னையில்லைப்பா. எவ்ளோ குறையுதோ குறையட்டும்.

சரிம்மா. அப்படியே செய்.

இன்று மாலை 4 மணி. ட்ரிங் ட்ரிங்.

அப்பா. கணக்கு மிஸ் எல்லார் முன்னாடியும் என்னைப் பாராட்டினாங்க.

அது சரி. மதிப்பெண் என்ன ஆச்சு.

92லிருந்து 78க்கு வந்துடுச்சு. ஆனாலும் பரவாயில்லை. நான் ஒரு Honest girlன்னு மிஸ் சொன்னாங்க. இப்படியே இருக்கணும்னு சொன்னாங்க. நானும் இப்படியே இருக்கப் போறேன்.

சூப்பர்மா. வாழ்த்துக்கள்.

***

ஒரு Honest Sathyaக்கு Honest பொண்ணுதானே பொறக்கும்னு obvious கமெண்ட்லாம் போட வேண்டாம் மக்களே!!

***


Read more...

Monday, February 15, 2016

உட்கார்ந்தான், ஓடினான், கிடந்தான்.ITPL to KRPuram ரெயில் நிலையம். முன்பெல்லாம் ஆட்டோவில் ரூ150 கேட்பாங்க. ரூ120க்கு வருவாங்க. சென்ற ஆண்டு நவம்பர் மழைக்குப் பிறகு எல்லா விலையும் கூடிப்போச்சு போல. இந்த முறை கேட்டதற்கு ரூ300ன்னாரு. சாமி, ரூ500க்கு நான் சென்னைக்கே போறேன். என்னை விட்டுடுங்கன்னு ஓலா ஆட்டோ பார்த்தால், ஒரே ஒரு நிமிடம் காட்டியது. Confirm செய்து நிமிர்ந்தால், அடடே, அவரே வந்துட்டாரேன்னு ஓலா வந்துடுச்சு. ரூ110 மீட்டர்+ரூ10 கொடுத்து ரெயில் ஏறியாச்சு.

நிமிர்ந்த முதுகும், நேர்கொண்ட பார்வையுமாய் உட்கார்ந்து போகணும் இந்த Double Deckerல். (அப்படின்னா, அந்தக் கட்சிக்காரங்க இந்த ரெயிலில் போக முடியாதான்னு கேட்கக்கூடாது!!). வாரயிறுதி வெள்ளி மாலைக்கு அதிக கும்பலில்லை. 3-seaterல் நான் ஒருவனே உட்கார்ந்து வந்ததால், கொஞ்சம் கால் நீட்டி கால் மடக்கி பிரச்னையில்லாமல் போக முடிந்தது.

Central to Triplicane பேருந்தில் ஏறியாச்சு. பெங்களூரு நிலைமையில் 4கிமீக்கு ரூ12ஆவது இருக்கும்னு காசு கொடுத்தால், ரூ4க்கு டிக்கெட் கொடுத்து, சரியான மீதி சில்லறையும் உடனே கொடுத்தார் நடத்துனர். கண்ணில் வந்த ஜலத்தை கஷ்டப்பட்டு அடக்கிண்டேன்.

85+ வயதான ஒரு சொந்தக்கார். நான்கைந்து சாக்லெட் கொடுத்தார். யாருக்கு இது? சஹானாவுக்கான்னா, அடேய் இது உனக்குதான். சாப்பிடுன்னார். எனக்கு எதுக்கு? சின்ன வயசில் தினமும் சாக்லெட் கேட்டு எங்க வீட்டுக்கு வருவே. உனக்கு எவ்வளவு வயசான என்ன? எங்களுக்கு நீ எப்பவுமே குழந்தைதான். அப்புறம் என்ன சொல்றது? போட்டேன் சாக்லெட்டை (என்) வாயில்.

அப்பா. எவ்ளோ நாளாச்சு இந்த லோக்கல் டாஸ்மாக் வாசத்தை நுகர்ந்து. பறக்கும் ரெயிலில் படுத்தபடியே (மட்டையாகி) வந்த இருவரிடம்தான் அந்த நறுமணம். ரூ5க்கு 15 நிமிடத்தில் திருவல்லிக்கேணியிலிருந்து கஸ்தூரிபாய் நகருக்கு வந்து சேர்த்துடுச்சு பறக்கும் ரெயில். (யஹ் கஸ்தூரிபாய் நகர் ஹை).

இறங்கியவுடன் தயாராக நின்றது புதுச்சேரிக்கான ஒரு குளிர்சாதன பேருந்து. லோக்கல் வெயிலில் காயணும்னு வந்தவனுக்கு, எதுக்கு குசாபே. வேண்டாம்னுட்டேன். (ஹிஹி. காசும் அதிகமா இருக்கும்லே!). பின்னாடியே இன்னொரு தநா விரைவுப் பேருந்து. ரூ97க்கு 3.30மணி நேரம் ஓட்டி (ஒரு சிறு தேநீர்க்கான நிறுத்தத்துடன்) புதுச்சேரி கொண்டு வந்து சேர்த்தார் ஓட்டுநர்.

ஆரோவில் ஓட்டம் துவங்கிடுச்சு. 9மணி வாக்கில் சரியான வெயில். சட்டையைக் கழற்றி கக்கத்தில் வைத்து ஓடிக்கொண்டிருந்தேன். அப்போ பக்கத்தில் வந்த ஒருவர், சட்டையை அவுத்திட்டீங்க சரி. அந்த பூணலையும் எடுத்துடுங்க. ரொம்ப தொந்தரவா இருக்கும். நான் அதுக்குதான் அதை கழற்றி Hotelலிலேயே வெச்சிட்டு வந்துட்டேன்னாரு. அடேய். அதுக்கு நீ ஊரிலேயே வெச்சிட்டு வந்திருக்காலாமேன்னு, சொல்ல நினைத்தேன். சொல்லவில்லை. சரி சார், அடுத்த முறை அப்படியே செய்றேன்னு கொஞ்சம் முன்னாடி ஓடிப்போனேன்.

சரி, 42கிமீ ஓட்டத்திற்கே சட்டையைக் கழட்டிட்டே, 75 அ 100 ஓடினா, இன்னும் எதையெல்லாம்.. ஐ மீன்.. என்னவெல்லாம் செய்வேன்னு ஏடாகூடமா கேட்காமல், அடுத்த பத்திக்குப் போங்க.

புதுச்சேரியில் தடுக்கி விழுந்தால்.. சரக்கு கடையல்ல. நான் சொல்ல வந்தது ஃப்ளெக்ஸ். கட்சிகளின் ‘தலைவர் வருகிறார்’ பேனர்கள் கூட இல்லை. திருமண வாழ்த்துகள் ப்ளெக்ஸ்கள். மணமக்களை ஓரமாக போட்டுவிட்டு, வாழ்த்தும் நண்பர்களின் படங்களுடன் ஏகப்பட்ட விளம்பரங்கள். டூ மச். இஅ23பு போல், ஒரு ஃப்ளெக்ஸ் மைதானம் அமைத்தாலும், அதுவும் நிரம்பிவிடும்.

இதுவும் புதுச்சேரியில்தான். ஞாயிறன்று அம்மா கட்சியினர் பட்டாசு வெடித்து சிறப்பு ஊர்வலம். இதனால் பேருந்துகள் ஒரு பத்து நிமிட நெரிசலில் சிக்கின. ஆனால் மக்கள் அதுக்காக திட்டவில்லை. ஏன்னா, எல்லா பேருந்துகளிலும் ஏறி ‘சார், லட்டு, அம்மா, லட்டு’ன்னு லட்டு விநியோகம் செய்து கொண்டிருந்தனர். எல்லாரும் ஆளுக்கு 2கூட வாங்கிக் கொண்டபோது, நான் லட்டு வேண்டாம்னு சொல்லிட்டேன். அதுக்காக, நான் அந்தக் கட்சி இல்லையோ? வேறெந்தக் கட்சியா இருக்கும்னெல்லாம் ஆராய்ச்சி வேண்டாம் மக்கழே.

Auroville to Puducherry பேருந்து நிலையத்திற்கு ஆட்டோ கேட்போம்னு எவ்வளவு ஆகும்னா, இவரும் சென்னை போகும் கட்டணத்தை விட அதிகமாக, ரூ200ன்னு சொல்லி, வண்டி எடுக்க வந்தார். சிரமப்படாதீங்க, நானே பார்த்துக்கிறேன்னு சொல்லி, ஒரு தனியார் பேருந்தில் ஏறி ரூ5க்கு டிக்கெட் எடுத்து, பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன்.

Puducherry to Bangalore. படுக்கை வசதி கொண்ட குசாபே. இரவுக்குள் வீட்டுக்கு வந்து சேர்த்துட்டான்.

இப்படியாக ஆரோவில் பயணம் இனிதே நிறைவுற்றது.

***


Read more...

Monday, February 1, 2016

வாரயிறுதி பயணக் குறிப்புகள்.


ஒரு திருமண நிகழ்ச்சிக்காக திருக்கோயிலூருக்குப் போய் வந்தோம். அந்த பயணத்திற்கான சிறு குறிப்புகள்தான் இந்தப் பதிவு.

பெங்களூரிலிருந்து திருக்கோயிலூருக்கா? பேருந்திலா? சாலைகள் மோசமாக இருக்கும். பார்த்து போங்கன்னு சொன்னார் நண்பர். கிருஷ்ணகிரி வரை தேநெ7 வெண்ணெய். அதுக்கப்புறமும் நண்பர் சொன்ன மாதிரி மோசமெல்லாம் இல்லை. படுமோசம். 3+ ஆண்டுகளாகவே அப்படிதான் இருக்காம். பல இடங்களில் சாலை / பாலம் போடும் வேலைகள். முடிஞ்சிடுச்சுன்னா நல்லாயிருக்கும். அதுவரை கர்ப்பஸ்த்ரிகள் அந்தப் பக்கம் போவதை தவிர்க்கவும்.

பல ஆண்டுகள் கழித்து சஹானாவைப் பார்த்த உறவினர் ஒருவர், என்னம்மா படிக்கிறே, என்ன பள்ளி, எத்தனாவது ரேங்க் என பல கேள்விகள் கேட்டாரு. இவரும் எல்லாத்துக்கும் பொறுமையா பதில் சொன்னாரு. முடிஞ்சுதா? அடுத்த நாள் காலை. அந்த ஆளை மறுபடி சந்திக்க நேர்ந்தது. சஹானாவைப் பார்த்து அவர் கேட்ட முதல் கேள்வி - என்னம்மா படிக்கிறே?.

செங்கம் பேருந்து நிலையம். ஆத்திரத்தை அடக்கிவிட்டு, அடுத்ததை அடக்க முடியாமல் ஊர் மக்கள் எல்லாரும் இங்கே வந்துதான் போவாங்க போலன்னு நினைக்க வைக்கும் வாடை. நம் ஓட்டுநருக்கும் அந்த வாடை வந்ததால், உடனே வண்டியை கிளப்பிட்டாரு.

ஊருக்குப் போய், தென்பெண்ணையைப் பார்த்து பல்லாண்டுகள் ஆச்சு. திச2015ல் தமிழக மழை வெள்ளத்தில் இந்த நதியில் தண்ணீர் விட்டிருக்காங்கன்னு சொன்னாங்க. ஜன2016ல் இன்னும் தண்ணீர் இருக்கலாம்னு நினைச்சி போனா, கண்ணுக்கெட்டிய வரை அங்கங்கே மக்கள், மணலில் குந்தவெச்சி, அசிங்கம் செய்திங். மிகப்பெரிய திறந்தவெளி அசிங்கரங்கம்.

உலகளந்த பெருமாள். கோயிலில் ஆறஅமர வேடிக்கை பார்த்தவாறு தரிசனம் முடிச்சாச்சு. பெரும்பாலான கோயில்களைப் போலவே இங்கும் செக்யூரிட்டி முதற்கொண்டு அனைவரும் வணக்கம் வைக்கிறார்கள். கையில் பல பத்து ரூபாய் நோட்டுகள் இருந்தால் நலம்.

இன்னொரு உறவினர். ஏன் என் பையன் பூணலுக்கு வரலை. இந்தக் கல்யாணத்துக்கு மட்டும் வரத் தெரிஞ்சுதில்லை? அடேய். இப்போ நான் வந்தது பெங்களூரிலிருந்து. அப்போ நான் இருந்தது அமெரிக்காவில். அதெல்லாம் எனக்குத் தெரியாது. உன்மேல் எனக்குக் கோபம் இன்னும் தீரலை. பிறகு, பந்தியில் அவருக்கு ஒரு எக்ஸ்ட்ரா லட்டு வாங்கித் தந்தபிறகு சிறிது பேசினார்.

திருவண்ணாமலை பேருந்து நிலையம். 12வாழைப்பழம் 10ரூபாய்னு வாங்கியாச்சு. சிறிது நேரத்தில் ஒரு வயதானவர் பசிக்குது ஏதாவது காசு கொடுங்கன்னு கேட்டு பேருந்து ஓரமாக வந்தாரேன்னு, சீப்பிலிருந்து 6வாப பிச்சி அவரிடம் கொடுத்தோம். பேருந்து புறப்பட்டு ஒரு சுற்று சுற்றி, வெளிச்சுவர் ஓரமாக மறையும் வரை அவரைப் பார்த்திருந்ததால், அந்தப் பழங்களை அவர் சாப்பிடாமல் தூக்கியெறிந்ததை பார்க்க முடிந்தது.

ஒரு வழிக்கு 250கிமீ. இரண்டு வழிக்கும் த நா அதிவிரைவுப் பேருந்து. சரியா 6மணி நேரம் எடுத்துக்கறாங்க. பேருந்து நல்ல கண்டிஷனில்தான் இருந்தது. ஆனா தேநெ7ல் வரும் பாலங்கள் மேல் ஏற முக்கி முக்கி முக்குது. சரக்கு லாரிகளுடன் போட்டி. 7 தாண்டியபிறகு சாலைகள் சரியில்லைன்னு ஏற்கனவே பார்த்தாச்சு.

போகும்போது அமைதியாகப் போன பேருந்து, திரும்பி வரும்போது மாபியா மெம்பர்களோடு வந்தது. ஓட்டுநர் + நடத்துனர் இருவரும் மாபியா. கேட்கணுமா. மொத்த 6மணி நேரமும் 80-90 பாடல்கள். இவங்களும் கூடவே பாடிக்கிட்டு. சரின்னு நாமும் காதில் சொருகியிருந்த தாசர் பாடல்களை எடுத்துவிட்டு, ஆத்தா பெத்தாளே ஆம்பளயா என்னத்தான்னு பாடிக்கிட்டே வந்து சில்க்போர்டில் இறங்கியாச்சு.

நன்றி வணக்கம்.

***

Read more...

Thursday, January 7, 2016

இரண்டு குரு’க்கள் வர்றார். வழி விடுங்கோ!!


இரண்டு குரு’க்கள் வர்றார். வழி விடுங்கோ!!

மொத்தம் இரண்டு தத்துவ நூல்கள். (பேர் இப்போதைக்கு தேவையில்லை!). ஒன்று சமஸ்கிருதத்தில். இன்னொன்று கன்னடத்தில். இரண்டு மொழிகளுமே நமக்கு ததிங்கினத்தோம். ஆனா அந்த நூல்களை படிக்கணும். அதனால், சரியான குரு ஒருவரைத் தேடிக் கொண்டிருந்த சமயம்.நான்கு மாதங்களுக்கு முன்:

அந்த சமஸ்கிருத நூலை கற்றுத்தரும் ஒரு குரு கிடைத்தார்னு போனேன். அவருடன் இருந்த ஒரு சிஷ்யர் நமக்குத் தெரிந்தவர். இந்த மாதிரி.. இந்த மாதிரின்னு சொன்னதற்கு, குரு - ஆஹா, அதுக்கென்ன? பேஷா சொல்லித் தரலாமே? வந்துடு.

நமக்கோ - சரிதான், இன்னிக்கு நரி முகத்தில்தான் முழிச்சிருக்கோம்னு நினைப்பு. ஆனா... ஊஊஊஊ..

அந்த சிஷ்யர் - குருஜி, இவருக்கு (அதாவது எனக்கு) கன்னடம் சரியா பேச வராது. தடுமாறி தடுமாறித்தான் பேசுவார். நம்ம கூட்டத்தில் நாம் எல்லாருமே கன்னடிகா. கன்னடம்தான் பேசுவோம். அதனால் இவருக்கு கஷ்டமா இருக்கும். ஒத்துப் போகாது.

குருஜி - தடுமாறியாவது பேசுவார்லே. அது போதும்.

சிஷ்யர் - வேண்டாம் குருஜி. திரும்பி என்னிடம் - அதுவும் தவிர, இவருக்கு ரொம்ப வயசாயிடுச்சு. பேசுவதே எங்களுக்கு சரியா கேட்கவில்லை. அதனால், இது சரிப்படாது.

குருஜியும் ஒன்றும் பேசவில்லை. நானும் சரின்னு திரும்பி வந்துவிட்டேன்.

No Hard feelings on either குருஜி or சிஷ்யர்.

ஒரு மாதத்திற்கு முன்:

கன்னட நூலுக்காக ஒருவர் சிக்கினார். அவரிடம் போய் கேட்டேன். சார், எனக்கு கன்னடம் மெதுவாகத்தான் படிக்க வரும். பேசுவதும் தமின்னடம் or கன்னமிழ் (கன்னடம்+தமிழ்) மாதிரிதான் இருக்கும். ஆனா எனக்கு இந்த புத்தகம் படிக்கணும்.

அவரும் ஊஊஊஊ சொல்லி அனுப்பிடுவார்னு நினைத்திருந்தபோதுதான், காதில் அந்த இன்பத்தேன், இன்பத்தேன்னு சொல்வாங்களே, அது -

அதனால் என்ன, நூலைக் கற்க மொழி அவசியமேயில்லை. எனக்கு கன்னடம் தெரியும். உனக்கு கன்னடம் புரியும். நம்ம இருவருக்கும் ஆங்கிலம் தெரியும். நான் கன்னட+ஆங்கிலத்திலேயே சொல்லித் தர்றேன். ஓகேதானே?

சலங்கை ஒலி கமல் போல் expression காட்ட நம்மால் முடியாது. ஆனால் மிகவும் நன்றி ஐயா என்றேன்.

கூடவே, நம் தளமான தாசர் பாடல்களைப் பற்றியும் சொன்னேன். இன்னொரு நற்செய்தியும் சொன்னார்.

தாச சாஹித்ய பாடத்தில் மணிபால் பல்கலையில் உள்ள ஒரு பிரிவில் பல்வேறு தேர்வுகள் நடப்பதாகவும், அதையும் நீ முயற்சிக்கலாமே என்றார்.

எனக்கு தலை கீழே. கால் மேலே. அப்புறம் சரியாக திரும்பி நின்றுவிட்டேன்.

மொத்தம் 12 செமஸ்டர்கள். குறைந்த பட்சம் 6 வருடங்கள் ஆகும். 12 தேர்வுகளும் முடித்தால், தாச சாஹித்யத்தில் M.Philக்கு நிகரான ஒரு பட்டம்.

அதற்கு மேல் பேச ஒன்றுமேயில்லை. எல்லாவற்றிற்கும் தலையை ஆட்டினேன்.

இதோ, இந்த ஜன 10 முதல் அந்த கன்னட நூல் + முதல் நிலைத் தேர்வுக்கான coaching வகுப்புகள் துவக்கம்.

இந்த ஆண்டு இனிய ஆண்டு.

***


Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP